இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 3 மீட்டராக குறைப்பு
ஸ்ரீஹரிகோட்டா: 'விண்வெளியில் விண்கலன்களை இணைக்கும் 'டாக்கிங்' சோதனையை வெற்றிக்கரமாக செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்திலிருந்து 3 மீட்டராக குறைக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதன் முன்னோட்டமாக, இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இதற்காக, கடந்த டிச.,30ம் தேதி , தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதோடு, 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. ஜன.7, 9 ஆகிய தேதிகளில் செயற்கைக்கோளில் இருந்த கூடுதல் உந்து சக்தி காரணமாக டாக்கிங் செய்ய முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,12) தற்போது உந்து சக்தி குறைக்கப்பட்டு, மெல்ல மெல்ல செயற்கைகோள்களுக்கு இடையிலான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
டாக்கிங் சோதனையை வெற்றிக்கரமாக செய்து முடிக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு விண்கலங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 230 மீட்டர் தூரத்திலிருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது. பின்னர் படிப்படியாக இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டது.
விண்வெளியில் இஸ்ரோ இப்போது செய்யும் டாக்கிங் சோதனையை, உலகில் மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை வெற்றிகரமாக செய்திருக்கின்றன. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த டாக்கிங் சோதனையை செய்ய இருக்கிறது.