'தென்னை பொருட்களை மதிப்பு கூட்டி விற்று மானியம் பெறலாம்'

மேட்டுப்பாளையம்; காரமடை அடுத்த மேடூரில், தென்னை வளர்ச்சி வாரிய, துவக்க தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். காரமடை மேற்கு ஒன்றிய தென்னை விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி நிர்மலா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வேளாண் பல்கலை, பூச்சியியல் துறை பேராசிரியர் மருதாசலம் பேசுகையில், '' வறட்சியான பகுதிகளில் வளரும் தென்னை மரங்களிலும், சரியான அளவில் நீர் நிர்வாகம் செய்யாமல் காய்ந்து வரும் தென்னை மரங்களிலும், நோய் தாக்குதல் அதிகம் இருக்கும். நாட்டு ரகங்களை விட, நான்கைந்து ஆண்டுகளில் தேங்காய் விளையும், குட்டை, நெட்டை ரகங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருக்கும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டு பொறியில், வேப்ப எண்ணெயை தடவி தோப்புகளில் கட்டி வைக்க வேண்டும். வெள்ளை ஈக்கள் இந்த பொறியில் சிக்கிக் கொள்ளும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதை சுத்தம் செய்ய வேண்டும்,' என்றார்.

தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர் முருகானந்தம் பேசுகையில், ''தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றனர். இப்பகுதியில் தென்னையில் இருந்து கிடைக்கும் ஏராளமான மூலப் பொருள்களை வைத்து, தொழில் செய்ய விரும்புவோர் தொழில் துவங்க வேண்டும். இதனால் மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற முடியும்,'' என்றார்.

விழாவில், கே.வி.கே., மத்திய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் சகாதேவன், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் சுப்ரியா, அனீஸ், பாரதி பிரியன், அறம் அங்கக விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement