விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
பாகூர் : பாகூரில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி, விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாகூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. விளையாட்டு வீரர்கள், பயிற்சிகள் மேற்கொள்ளவும், போட்டிகளை நடத்திடவும், இந்த உள்விளையாட்டு அரங்கத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி பாகூர் கொம்யூன் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கதினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் வளவன் தலைமை தாங்கினார்.
பாகூர் கொம்யூன் விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் கேசவ அன்பு நிலவன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் ராஜ், முருகன், ஆறுமுகம், கேரம் சதீஷ், வாலிபால் சதீஷ், கூடோ சந்தோஷ், பெத்தான் சந்துரு, வக்கீல் ராமலிங்கம், திருவேங்கடம், வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.