தோட்ட விவசாயத்தில் நிலக்கடலை சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

கூடலுார் : மானாவாரி நிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு வந்த நிலக்கடலை தற்போது கூடலுார் பகுதியில் தோட்ட விவசாயத்தில் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை நிலக்கடலை சாகுபடி அதிகளவில் நடந்து வந்தது. சித்திரையில் அறுவடையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கூடலுார் பகுதியில் வந்து, தங்கி நிலக்கடலை அறுவடை பணியில் ஈடுபடுவர்.

காலப்போக்கில் விலை குறைவு, தொழிலாளர்களின் கூடுதல் சம்பளம் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்தது. சில ஆண்டுகளாக மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி முழுமையாக நடைபெற வில்லை.

இந்நிலையில் தற்போது தோட்ட விவசாயத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி உள்ளனர். பெருமாள் கோயில், கழுதை மேடு, ஏகலுாத்து உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அதிகம் பயிரிட்டு உள்ளனர். நிலக்கடலை விலை அதிகமாக இருப்பதால் தோட்ட விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement