30 ஆண்டு போராட்டத்துக்கு விடிவு காலம்! மலை கிராமங்களுக்கு சாலை வசதி

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க, நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலையில் ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றி பெரும்பதி, பெருக்கைபதி, குஞ்சூர்பதி, மாங்குழி, பசுமணி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு மலை கிராமத்திலும், 50 முதல், 150 பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். கம்பு, அவரை, துவரை உள்ளிட்டவை பிரதான பயிர்களாக பயிர் செய்யப்படுகின்றன.

கடந்த, 2007ம் ஆண்டு பிரதமரின் கிராமப்புற சாலைகள் இணைப்பு திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில், கோவனுார் மலையடிவாரத்தில் இருந்து பாலமலை, குஞ்சூர்பதி மலை கிராமம் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதோடு பழங்குடியின மக்கள், பாலமலை குஞ்சூர்பதி வரை மலை கிராமங்களுக்கு கரடு, முரடான பாதையில் சென்று அவதிப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சாலை வசதியை மாங்குழி, பசுமணி, பசுமணிபுதுார் ஆகிய கிராமங்களுக்கும் நீட்டிக்க வேண்டும். பெரும்பதி, பெருக்கைபதி, பெருக்கை பதிப்புதுார் பழங்குடியின கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும், நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் மனு அளித்தனர். பழங்குடியின மக்களின், 30 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின்னர், தற்போது பாலமலையில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும், 6 கிராமங்களுக்கு சாலை வசதி செய்ய நிதி ஒப்பளிப்பு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை சென்னை பழங்குடியினர் நல இயக்குனரகத்தின் இயக்குனர் அண்ணாதுரை, தமிழக வனத்துறை தலைவருக்கு அனுப்பி உள்ளார். அதில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குஞ்சூர்பதி மலை கிராமத்தில் இருந்து மாங்குழி வரை, 2.50 கி.மீ., தொலைவுக்கான சாலை, 2.28 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. அதே பகுதியில் பெரும்பதி, பெருக்கைபதி புதூருக்கான, 2 கி.மீ., சாலை, 1.65 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மாங்குழி ரோடு, பசுமணி, பசுமணி புதூருக்கான இரண்டு கி.மீ., சாலை, 2.40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது என, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, நாயக்கன்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சாந்தி பிரியா சந்துரு ஜெகவி, முன்னாள் துணைத் தலைவர் சின்னராஜ் ஆகியோர் கூறுகையில், ''பழங்குடியின மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ள இம்மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சரியான சாலைகள் இல்லாமல், பழங்குடியின மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

உரிய சாலை வசதி இல்லாததால், பழங்குடியின மக்கள் உயர் படிப்புகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெரியநாயக்கன்பாளையம், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்ல முடியாமல், இளைஞர்களும், இளம் பெண்களும் அவதிப்பட்டனர்.

உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சவால் இருந்தது. தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், விரைவில் சாலை அமைக்கும் பணியை துவங்கும் என, எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Advertisement