கட்ட துவங்கிய வீடுகள் விற்பனை ஓராண்டில் 47 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டத் துவங்கப்பட்ட குடியிருப்புகளில், வீடுகள் விற்பனை ஓராண்டில் 47 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான மேஜிக்பிரிக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுமானத்தில் உள்ள குடியிருப்புகளின் விற்பனை ஓராண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 47 சதவீதம் உயர்ந்துள்ளது. பெங்களூரு, குருகிராம் மற்றும் கோல்கட்டா நகரங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன.

குடியிருப்புகள் விற்பனையில், முந்தைய ஆண்டைக்காட்டிலும் பெங்களூரு 114 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் குருகிராம் உள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் குருகிராமில் கட்டுமானத்தில் உள்ள சொத்துக்கள் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், குருகிராம் 31 சதவீதத்துடன் மிக முக்கிய இடம் வகிக்கிறது.

இதைத்தொடர்ந்து, கோல்கட்டா 28 சதவீதத்துடனும், பெங்களூரு 27 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முக்கிய நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தையில் கட்டுமானத்தில் உள்ள சொத்துக்களின் சராசரி விலை, சதுர அடி 12,064 ரூபாயாக உள்ளது.

பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு ஏற்ற வகையில், அஹமதாபாத், கோல்கட்டா மற்றும் கிரேட்ட நொய்டா நகரங்களில் முறையே, சதுர அடி 6,708, 7,259 மற்றும் 8,281 ரூபாய் என்ற விலையில் கிடைக்கின்றன.

இதற்கு நேர்மாறாக பெங்களூருவில் சதுர அடி 10,988 ரூபாயாகவும், நொய்டாவில் 11,706 மற்றும் நவி மும்பையில் 11,738 ரூபாயாகவும் மலிவு விலை வீட்டு பிரிவுகளில் உயர்தர வீடுகள் உள்ளன.

பிரீமியம் வகை வீடுகள் பிரிவில், ஒரு சதுர அடி, டில்லி 18,150 ரூபாயுடனும், மும்பை 27,725 ரூபாயுடனும் குருகிராம் 14,579 ரூபாயும் கொண்டு உள்ளன.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement