இன்று போகிப்பண்டிகை கொண்டாட்டம்
சென்னை: போகிப்பண்டிகை இன்று (ஜனவரி:13) உலக தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் தினத்திற்கு முதல் நாள் அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம் முழுவதும் சூடிக் கொடுத்த நாச்சியார் ஸ்ரீமன் நாராயனணை துதித்து நோன்பிருந்து ஒவ்வொரு நாளும் 30 பாசுரங்களை பாடினார். இறுதி நாளில் பகவான் நாராயணனை திருமணம் புரிந்து போக பாக்கியங்களை அனுபவித்தார். இதன் காரணமாக போகிப் பண்டிகை எனப்படுகிறது.
இருளை மூத்தவள் என்றும், பகலை ஸ்ரீதேவி என்றும் கூறுவர். புராண தத்துவப்படி மூதேவியை குறிக்கும் இருண்ட காலம் முடிந்து ஸ்ரீதேவியை குறிக்கும் பிரகாசமான கால துவக்கத்தை குறிக்கும் விதமாக போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது.
இந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அழித்து புதிய பொருட்களுக்கு இடம் கொடுப்பதும் முக்கியமான விஷயமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இந்நாளில் பழைய பொருட்களை நீக்கி விட்டு வீட்டினை சுத்தம் செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருவார்கள். வீட்டில் பழைய பொருட்களை நீக்கி அழிப்பது போல் நம் மனதிலும் தீய எண்ணங்களை அழிக்க வேண்டும் என்பது இப்பண்டிகையின் முக்கிய தத்துவமாகும்.
காப்பு கட்டுதல்
போகிப்பண்டிகை அன்று ஒவ்வொரு வீ்ட்டின் நிலைக்கதவுக்கு மேல் காப்பு கட்டுவார்கள். தேவர்களின் தலைவராகிய இந்திரனை இந்நன்னாளில் மக்கள் வணங்குவார்கள் இந்திரன் மட்டுமில்லாது சுகபோக வாழ்க்கைக்கு அதிபதியாக விளங்கும் சுக்கிர பகவானையும் இந்நாளில் மக்கள் வணங்குவார்கள்.
ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி வீட்டினுள் தீய சக்தி நுழையாதவாறு நிலைக்கதவுக்கு மேல் காப்பு கட்டுவார்கள்