ஆயிரம் சந்தேகங்கள்: வாங்காத லோன்களை சிபிலில் இருந்து எப்படி நீக்க வேண்டும்?

என் மகளின் பெயரில் உள்ள மியூச்சுவல் பண்டு தொகையை எடுத்து, தங்கக் காசில் முதலீடு செய்யலாமா? அல்லது நிலத்தில் முதலீடு செய்யலாமா? இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்து கொடுக்க இருப்பதால் அதுவரையே இந்த முதலீடு.

கா.ராஜகோபால், கோவை.


மியூச்சுவல் பண்டு, தங்கம், நிலம் ஆகியவற்றில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் எது விரைவாக வருவாய் ஈட்டித் தரும் என்பதே தங்கள் கேள்வி என்று புரிந்துகொள்கிறேன்.

ஜனவரி 20ல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார்; அதனால் தங்கத்தின் தேவை உயரும், விலையும் அதிகரிக்கும் என்பது ஒரு யூகம்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் இராது, அதனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் அதிகளவு லாபம் ஈட்டாது என்பதும் இன்னொரு அனுமானம். அடிமனை, வீடு விற்பனையில் ஒரு தேக்கம் இருக்கிறது; அதனால், விலை உயர்வு இருக்காது என்பதும் இன்னொரு ஹேஷ்யம். இவையெல்லாம் இப்போதைய நிலை.

ஜனவரி 20 டிரம்ப் பதவியேற்பு, பிப்ரவரி 1 பட்ஜெட் ஆகியவை முடியட்டும். அதன் பிறகு தான் ஒரு தெளிவு தென்படும். இவையெதுவுமே இல்லாமல், மியூச்சுவல் பண்டுத் திட்டங்களே ஜாம் ஜாமென்று வளருமானால், ஏன் அந்தப் பணத்தைத் தொடுவானேன்?

நான் தங்க நகைக் கடன் வாங்கி இருந்தேன். நகையை திரும்ப பெற்றுக் கொண்டு கடனை முடித்து விட்டேன். இப்பொழுது என் பெயரில் எந்த லோனுமே இல்லை. ஆனால் எனது சிபில் ஸ்கோர் கம்மியாக உள்ளது. ஏன் ஸ்கோர் அதிகமாக வரவில்லை?

கே.வனிதா, மதுரை


நீங்கள் லோன் கட்டி முடித்த பின்னர், அந்த விபரத்தை, உங்களுக்குக் கடன் கொடுத்த நிறுவனமோ, வங்கியோ கிரெடிட் ஏஜென்சிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும். தெரிவித்ததா என்பதை உறுதி செய்யுங்கள்.

ஜனவரி 1க்கு பின்னர், 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஏஜென்சிகளுக்கு சமீபத்திய விபரங்களை கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்பது, ஆர்.பி.ஐ. உத்தரவு. ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால் கிரெடிட் ஏஜென்சியிடம் புகார் அளியுங்கள்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யலாமா? கிரிப்டோ கரன்சி எதிர்காலம் குறித்து விளக்கம் தரவும்.

கோ.நரேந்திரன், கோவை.

எல்லா நாடுகளும் ஏதேனும் ஒரு நாள் கிரிப்டோவுக்கு மாறித்தான் ஆகவேண்டும் என்று ஒரு தரப்பு சூடம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. கட்டுப்பாடு செலுத்த முடியாத எந்த நாணயத்தையும் எந்த நாடும் ஏற்க வாய்ப்பில்லை என்று இன்னொரு தரப்பு துண்டு போட்டுத் தாண்டுகிறது.

நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே, கிரிப்டோவில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா; எதிர்காலம் உண்டா, இல்லையா? என்ற முடிவுக்கு வரமுடியும். நான் துண்டு போட்டுத் தாண்டும் தரப்பில் நிற்கிறேன்.

நான் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளி. போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓய்வுபெற்ற தொழிலாளர் அனைவருக்கும் அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை ஏன்? மற்ற துறையைச் சார்ந்த அனைவருக்கும் தரப்படுகிறது ; விளக்கவும்.

வி.இளங்கோவன்,

திருவள்ளூர்.


கஜானாவில் போதிய பணமில்லையோ என்னவோ? கூடுதல் சுமையை ஏற்றிக்கொள்ள எந்த அரசு தான் விரும்பும்?

நான் அலைபேசி செயலியில் சிபில் ஸ்கோரைப் பார்க்கையில், கிரெடிட் கார்டு கன்ஸ்யூமர் லோன், சில வங்கிகளின் பர்சனல் லோன் என நான் வாங்காத லோன்களை வாங்கி இருப்பதாக காண்பிக்கிறது. ஆனால் நான் எந்த லோனும் வாங்கவில்லை. இதை நீக்குவதற்காக சில வழிமுறைகள் அந்தச் செயலியில் உள்ளது. ஆனால் எனக்கு அது கடினமாக இருக்கிறது. வயதான காலத்தில் மன உளைச்சல் அடைகிறேன். எனவே இதை எளிதாக எப்படி நீக்க வேண்டும் அல்லது எங்கு நேரடியாக செல்ல வேண்டும்?

சிவகுமார், சென்னை.

எளிதாக நீக்குவதற்கு எந்த வழியும் இல்லை. செயலியின் வாயிலாக பார்ப்பதை விடுத்து, சிபில் நிறுவனத்தில் வலைத்தளத்துக்குப் போய் பணம் கட்டி பதிவு செய்துகொள்ளுங்கள். உங்களுடைய சமீபத்திய முழு கிரெடிட் ஸ்கோர் விபரம், கடன்கள், கிரெடிட் கார்டு தகவல்கள் அத்தனையும் இருக்கும்.

எங்கேயெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் உள்ளதோ அவையெல்லாமும் பட்டியல் இடப்பட்டிருக்கும். எந்தெந்த கடன்களை நீங்கள் வாங்கவில்லையோ, அவற்றையெல்லாம் பற்றி, அதே வலைத்தளத்தில் புகார் அளியுங்கள்.

கூடவே, அந்தந்த வங்கிகள் அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் தொடர்பு இ - மெயில், போன் நம்பர்கள் இருக்கும்.

இந்த கிரெடிட் அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு அமைப்புக்கும் மின்னஞ்சல் அனுப்பி, தவறான விபரங்களை நீக்குமாறு கோருங்கள். அக்னாலட்ஜ்மென்ட் இ - மெயில் வரும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு தெரியும்.

அப்படி வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு நேரில் போய், தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கித் தருமாறு கோருங்கள்.

அப்படியும் எதுவும் நடக்கவில்லை என்றால் குறைதீர் ஆணையரிடம் செல்லுங்கள். பல வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டபோது ஏற்பட்ட குழப்பங்களில் இது முக்கியமானது. வாடிக்கையாளர்கள் திண்டாடித் தெருவில் நிற்கிறார்கள், என்னைப் போன்றே.

ஒருசில சிறு நிதி வங்கிகள் வலுவாக இல்லை. வேறு சில சிறு நிதி வங்கிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால், அவை திவாலாகவில்லை. இவற்றில் முதலீட்டுக்கு காப்பீடு உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இவற்றில் முதலீடு செய்யலாமா?

எஸ்.சிவகுமார்,

மின்னஞ்சல்

நம் நாட்டு வங்கிகளின் மீதும், ஆர்.பி.ஐ., மீதும் இவ்வளவு மோசமான அவநம்பிக்கை தேவையில்லை. சாதாரணவர்களின் முதலீடுக்குப் பாதுகாப்பு தருவதற்குத் தான் வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டிஐசிஜிசி) இருக்கிறதே தவிர, வங்கிகள் திவாலாகிவிடும் என்று இதற்கு அர்த்தமில்லை.

ஒருவேளை பெரிய வங்கி அல்லது சிறுநிதி வங்கிகளில் ஏதேனும் பொருளாதாரச் சிரமம் இருக்குமானால், அது உடனடியாக ஆர்.பி.ஐ., கவனத்துக்கு வந்துவிடும். 'பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன்' நடவடிக்கை எடுக்கப்பட்டு, வங்கிகள் ஒழுங்கப்படுத்தப்படும்.


அதையும் மீறி, அந்த நிதி அமைப்பை மீட்க முடியவில்லை எனில், பெரிய வங்கியோடு இணைக்கப்படும். வாடிக்கையாளரின் முதலீடு மோசம் போக வாய்ப்பே இல்லை.


வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.


ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.


ஆர்.வெங்கடேஷ்


pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Advertisement