மாசில்லா மலர்களின் மகத்துவம் கற்பிக்கும் சூழல் பாதுகாப்பு மன்றம் கொண்டு ராஜா பள்ளி மாணவர்கள் ஆர்வம்

தேனி என்.ஆர்.டி., நகரில் கொண்டு ராஜா நினைவு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு மாணாக்கர்கள் 300 பேர் படிக்கின்றனர். பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் மூலம் ஒன்றே முக்கால் ஏக்கர் மைதானத்தில் 100 நிழல் தரும் மரங்கள் வளர்த்துள்ளனர்.

இதுதவிர தற்போது மூலிகைத் தோட்டம் அமைத்து அதுகுறித்து மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்புடன், மரங்கன்றுகள், மூலிகைத் தோட்டம் அமைப்பதன் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

இப்பள்ளி மைதானம் பறந்து விரிந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை அறைக்கு எதிரே உள்ள இடத்திலும், மைதானத்தின் ஓரங்களிலும் நிழல் தரும் மரங்களான வேம்பு, வாழை, புங்கை, பூவரசு, தேக்கு, நாவல் மரங்கள் அணிவகுத்து நிழல் தரும் மரங்களாக செழித்து வளர்க்கப்பட்டு உள்ளன.

பள்ளியின் செயலர் கொண்டுராமராஜா வழிகாட்டுதலில், தலைமை ஆசிரியை வினோதினி மேற்பார்வையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாட வேலை தவிர, பிற நேரங்களில் சூழல் பாதுகாப்பு, விலங்குகள், பறவைகள், அறிய வகை தாவரங்கள் குறித்த விழிப்புணர்வு கல்வியை கற்பிக்கின்றனர்.

மேலும் அறிய வகை மரங்களான மகிழம்பூ மரம், கல்யாண முருங்கை, சரக்கொன்றை மரங்களும் மைதானத்தில் செழித்து வளர்த்துள்ளன.

கலந்துரையாடல் வகுப்பு



சிவக்குமார், வரலாற்று ஆசிரியர்: காலநிலை மாற்றங்கள் அபாயகரமாக உள்ளன. அதனால் எங்கள் பள்ளியில் படிக்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்பு குறித்தும், தாவரங்கள், அதன் தனிப்பட்ட திறன்கள், பெயர், எந்தெந்த தாவரங்களால் என்னென்ன பயன்கள் என கற்பித்து, அதுகுறித்து கலந்துரையாடல் வகுப்பு நடத்தி மாணவர்களுக்கு இயற்கையுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் மூலிகைத் தோட்டம் அமைத்து ஒவ்வொரு மூலிகை குறித்த தாவரவியல் பெயர், அதன் பண்புகள், அதன் மருத்துவ குணங்கள் குறித்து எடுத்துரைத்து, அதனை நேரடியாக பயன்படுத்தவும் செயல்முறை விளக்கங்களையும் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு அளித்து வருகிறோம். மேலும் பசுமைப்படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றங்களில் உறுப்பினர்களாக உள்ள மாணவ, மாணவிகளை தவிர்த்து, அனைத்து மாணவ, மாணவிகளும் சுழற்சி முறையில் இந்த வகுப்பில் பங்கேற்க வைக்கிறோம்.

மேலும் முக்கிய பண்டிகை தினங்களிலும் விழிப்புணர்வு ஊர்வலம், காடுகளால் சமூகத்திற்கு ஏற்படும் பங்களிப்பு, புலிகளின் வாழ்விட பரப்பளவு கூடுவதால் நீர்வளம் உருவாகும் 'உணவுச்சங்கிலி' நடைமுறையும் விளக்கி வருகிறோம்.

இதனால் மாணவர் களுக்கு இயற்கை மீதான அளப்பரிய பிணைப்பு பள்ளியில் படிக்கும் மாணவ பருவத்திலேயே உருவாவதை கண்கூடாக கண்டு வருகிறோம்.', என்றார்.

கருங்குவளை மலர் விழிப்புணர்வு



வேல்முருகன், அறிவியல் ஆசிரியர்: நம் பள்ளியில் பாட வேலை தவிர தாவரங்களில் தனித்துவமான திறன்கள் கற்பிக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு தமிழ் மொழியின் பேச்சு வழக்கில், 'சங்குப்பூ' என, அழைக்கப்படும் கருங்குவளை மலர் இறை வழிபாட்டில் சனி பகவானுக்கு அதிகமாக படைத்து வணங்குவது வழக்கமாக ஹிந்து சமய நடைமுறையில் உள்ளது. இதன் தாவரவியல் பெயர் 'கிளைட்ரோரியா டெர்னேஷியா' ஆகும். பயறு வகை தாவர குடும்பத்தை சேர்ந்தது. இம்மாதிரியான தாவரங்கள் குறித்து மாணவர்களுக்கு தெளிவாக கற்பித்து வருகிறோம்.

மேலும் இவ்வகை பூக்களின் இதழ்கள் மாறுபாடுகள் குறித்து, நேரடியாகவே மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதால், அவர்கள் பெற்றோர், உறவினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் அறிவியல் சார்ந்த கற்றல் திறன் இயற்கையிலேயே மாணவர்களிடம் மேலோங்குகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயிற்சி அளிக்க ஊக்கம் அளிக்கிறது., என்றார்.

Advertisement