நாட்டை உலுக்கிய கேரள பாலியல் வன்கொடுமை சம்பவம்: கடும் நடவடிக்கை இருக்கும் என்கிறார் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயதாகும் தடகள வீராங்கனை, குழந்தைகள் நலத்துறையில் சமீபத்தில் புகார் அளித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமி சொன்ன புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆலப்புழாவில் நடந்த கட்சி கூட்டத்தில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது: பெண்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்வதில் கேரளா அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்மையின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை கொண்டுள்ளது.
பெண்கள் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பாக உணர வேண்டும். அவர்களின் பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்தவொரு செயல்களையும் செய்ய மாட்டோம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுப்போம். கேரளா வகுப்புவாத சக்திகள் செழிக்க முடியாத ஒரு நிலம். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம். கேரளா அரசு அமைதி மற்றும் சகவாழ்வை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.