சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை முடக்கும் அரசாணைக்கு எதிராக போராட்டம்
சென்னை : சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை முடக்கும் வகையில், தி.மு.க., அரசு வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து, மருத்துவ துணை ஆய்வாளர்கள் நலச்சங்கத்தினர், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, சங்கத்தின் துணை தலைவர் தனவந்தன் கூறியதாவது:
தமிழகத்தில், மருத்துவ ஆய்வு படிப்புகளை முடித்த, 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சுய தொழில் முனைவோராக மாறி, ரத்த பரிசோதன கூடங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள், பாதுகாப்பாக மருத்துவ கழிவுகளை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிக்கின்றனர்.
பொதுவாக கிராம, நகர்ப்புறங்களில் உள்ள பாமர மக்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்து, அவர்கள் நோய் தடுப்பில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட, இந்த ஆய்வகங்கள் உதவுகின்றன.
இந்நிலையில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், கிராமங்களில் உள்ள ரத்தப் பரிசோதனை கூடங்கள், 700 சதுர அடியிலும், நகர்ப்புறங்களில் உள்ள கூடங்கள் 1,200 சதுர அடியிலும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில், அது கைவிடப்பட்டது.
தற்போது, கடந்த 30ம் தேதி, தி.மு.க., அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நகரங்களில், 500 - 700 சதுரடி வரையும், கிராமங்களில், 300 சதுர அடியிலும் ரத்தப் பரிசோதனை கூடங்கள் அமைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், அதிகளவில் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பரிசோதனை கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டி இருக்கும். அதேநேரம் சுயதொழில் துவங்கி உள்ள இளைஞர்கள் பாதிக்கப்படுவர். அதனால், இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.