100 ஏக்கர் தொழிற்பேட்டை திட்டம் என்னாச்சு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடித்தொழில் உள்ளது.

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன. ஆனால், மீன்களை பதப்படுத்தி சுத்தம் செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் இல்லை. இதனால் மீன்கள் துாத்துக்குடி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் பதப்படுத்தி வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் சிட்கோ சார்பில், துாத்துக்குடி போல கடல் உணவு நிறுவனங்கள் கொண்டு வருவதற்காக, ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகமை உதவியுடன் சக்கரக்கோட்டை ஊராட்சி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், 100 ஏக்கரில், 22 கோடியில் கடல் பூங்கா அமைக்க திட்டமிட்டது. இதற்காக, 2019ல் முதற்கட்டமாக 50 ஏக்கரில் பணிகள் துவங்கின.

தொழில்மனை வளாகங்கள், மீன்பிடி தொழில் தொடர்பான கட்டமைப்புகள், தண்ணீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இங்கு நல்ல தண்ணீர் வசதியில்லாததால் எதிர்பார்த்த அளவிற்கு வலை தயாரித்தல், பதப்படுத்தலுக்கு தொழில் நிறுவனங்கள் முன்வரவில்லை.

இதனால் கடல் பூங்கா திட்டத்தை கைவிட்டு பொது தொழிற்பேட்டையாக சிட்கோ நிறுவனம் மாற்றியது. சில தொழில் நிறுவனங்கள் மட்டுமே வந்துள்ளன. ஐந்தாண்டுகளாகியும் சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தொழில் நிறுவனங்களுக்குரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடாக மாறியுள்ளது.

இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலாவது புதிதாக தொழில் நிறுவனங்களை இங்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement