பழனிசாமி உறவினர் நிறுவனம்: ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

3

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினர் நடத்தி வரும் நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினரான இவர், 'என்.ஆர்., குரூப்ஸ், என்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன், ஸ்பேக் ஸ்டார்ச் புராடெக்ட்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிறுவனங்கள் வாயிலாக, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாசனம், மின்சாரம் தயாரிப்பு, கடல் சார்பு துறைகளின் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 7ம் தேதியில் இருந்து, ஐந்து நாட்களாக சென்னை, ஈரோடு என, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள, இந்நிறுவனத்திற்கு சொந்தமான 26 இடங்களில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஈரோடு, செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் நகரில் உள்ள, என்.ஆர்., குரூப்ஸ் தலைமை அலுவலகம், என்.ஆர்., திருமண மண்டபம், நவநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமலிங்கம் வீடு, அம்மாபேட்டை அருகே, பூனாச்சியில் உள்ள ஸ்பேக் ஸ்டார்ச் புராடெக்ட்ஸ் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில், 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 700 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

அவர்களிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisement