கொடைக்கானலில் தடை இயந்திர பயன்பாடு

கொடைக்கானல் : கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடுகள் தாராளமாக நடப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை உள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி போர்வெல், கம்ப்ரஸர், பாறை தகர்ப்பு, மண் அள்ளும் இயந்திரம் பயன்பாடு உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. கொடைக்கானல் நகர் பகுதி,மேல்மலை பகுதிகளில் தாராளமாக இத்தகைய பயன்பாடுகள் தொடர்கின்றன. இதை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை, வனத்துறையினர் கவனிப்பு பெற்றுக் கொண்டு கண்டு கொள்வதில்லை.

நேற்று முன் தினம் இரவு சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் ஜனரஞ்சரமான பகுதியாக உள்ள செவன் ரோடு பகுதியில் போர்வெல் இயந்திரம் போக்குவரத்துக்கு இடையூறாக சென்றது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து இரவு நேரங்களில் அனுமதியின்றி போர்வெல் அமைக்கும் பணி தாராளமாக நடக்கிறது.

பெயரளவிற்கு இயந்திரங்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் வருவாய்த்துறையினர் வளம் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இத்தகைய நிகழ்வால் மலைப்பகுதியில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இனியாவது அதிகாரிகள் தடை இயந்திரங்கள் மீது கடுமை காட்ட வேண்டும்.

Advertisement