மூணாறில் கம்யூனிஸ்ட் கூட்டணியில் உரசல்

மூணாறு : மூணாறில் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இடையே கடும் உரசல் ஏற்பட்டுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூ., இடுக்கி மாவட்ட மாநாட்டை முன்னிட்டு, மூணாறில் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் ஜன.4ல் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய முன்னாள் மின்துறை அமைச்சரும், உடும்பன்சோலை எம்.எல்.ஏ.வுமான எம்.எம்.மணி மூணாறில் சுற்றுலா வளர்ச்சிக்கு சுற்றுலாத் தொழில் புரிவோர், டிரைவர்கள், வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இடையூறாக உள்ளதாக தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இந்திய கம்யூ., மூணாறு மண்டலச் செயலாளர் சந்திரபால், 'மணியின் பேச்சை அங்கீகரிக்க இயலாது.' என, விமர்சித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'மணிக்கு அரசியல் கற்றுத்தர வேண்டாம்.' எனவும், 'அதற்கான பக்குவம் இல்லாத சிறுவன்' என, சந்திரபாலை, மார்க்சிஸ்ட் கம்யூ., மூணாறு பகுதிச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் இந்திய கம்யூ., மண்டலச் செயலாளர் சந்திரபால் தலைமையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது: மணி வாயை திறந்தால் மிகவும் மோசமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர், தன்னை முதல்வர் பினராயி விஜயனை விட பெரிய ஆளாக நினைக்கிறார். அரசியல் கொலைகளை கூறி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என, தெரிவித்தனர். மாவட்டத்தில் பிற பகுதிகளில் கூட்டணி வலுவாக செயல்பட்டு வரும் நிலையில் மூணாறில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement