மதுபான ஆலை உரிம விவகாரத்தில் ஊழல்; சி.பி.ஐ., விசாரணை தேவை:
புதுச்சேரி : புதுச்சேரியில் மதுபான ஆலை உரிம விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக கவர்னர் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
10 ஆயிரம் கோடி சொத்து கொண்ட புதுச்சேரி மின் துறையை தனியாருக்கு மாற்றக் கூடாது என, வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைக்க ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
எந்த காலத்திலும் மின் துறையை தனியார் மயமாக்க விடமாட்டோம். பிரீபெய்டு திட்டத்தை நடைமுறைபடுத்த விடமாட்டோம். அரசை எதிர்த்து காங்., போராட்டத்தில் ஈடுபடும்.
புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தை பெற முதல் கட்ட கடிதம் 8 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அப்போதைய கவர்னர் தமிழிசை ஒப்புதல் இல்லாமல் இடைக்கால அனுமதி அந்த கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு 8 லைசென்சுகளும் கவர்னர் அனுமதி இல்லாமல் தற்காலிக ஒப்புதல் யார் கொடுத்தது என முதல்வர் தெரிவிக்க வேண்டும். மதுபான உரிமை கொடுப்பதற்காக இந்த அரசு செய்துள்ள தில்லுமுல்லு, ஊழல் தொடர்பாக கவர்னர் சி.பி.ஐ., விசாரணை நடத்தவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
முதல் கட்டமாக கவர்னரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். இந்த விவகாரத்தில் ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டால் அதில் கவர்னருக்கும் தொடர்பு உள்ளதாக தான் அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு கொடுக்காமல் உள்ளனர். இலவச வேட்டி சேலையும் வழங்காமல் பணமாக கொடுக்கின்றனர். கடந்த காங்., ஆட்சியை குறைசொன்ன முதல்வர் ரங்கசாமி இப்பொழுது என்ன சொல்ல போகிறார். ரூ.750-க்கு பொங்கல் பொருட்கள் வாங்க முடியுமா. ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்றார்.