பசுக்களின் மடியை அறுத்து மர்ம கும்பல் அட்டகாசம்

சாம்ராஜ்பேட்: சாலையில் மூன்று பசுக்களின் மடியை, மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெங்களூரு, சாம்ராஜ்பேட்டையை சேர்ந்தவர் கர்ணன். இவர் எட்டு பசுக்களை வளர்த்து வந்தார். இவற்றில் மூன்று முதல் நான்கு பசுக்கள் வீட்டிற்கு வராமல், சாலையில் உறங்கும் பழக்கம் உள்ளவை.

நேற்று முன்தினம் இரவு, சாம்ராஜ்பேட் விஜயநகர் சாலையில், இவரது மூன்று பசுக்கள் இருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத மர்ம கும்பல், ஒன்றும் அறியாத பசுவின் மடியை கத்தியால் வெட்டி உள்ளது.

இதனால் பசுக்கள் வலியால் துடி துடித்தன. இரவு முழுக்க பசுக்கள் கத்திக் கொண்டிருந்தன. சம்பவம் நடந்த சாலையே ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது.

இச்சம்பவம் குறித்து நேற்று அதிகாலை அப்பகுதியினர் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து, விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூன்று பசுக்களும் சாம்ராஜ்பேட் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்விஷயம் தெரிய வந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன், ஹிந்து அமைப்பு தலைவர்கள், தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் காணப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியதாவது:

காங்கிரஸ் அரசு, ஆங்கில புத்தாண்டு பரிசாக, பஸ் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது சங்கராந்தி விழாவிற்கு பரிசாக, பசுவின் மடியை அறுத்து நாச வேலை செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, சாம்ராஜ்பேட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடந்தபோது, இந்த மாடுகள் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டிருந்தன.

இதற்கு பழி தீர்க்கவே, பசுக்களின் மடிக்கள் அறுக்கப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்களை காங்கிரஸ் கண்டிப்பதில்லை. ஹிந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவே, சதி வேலைகள் செய்யப்படுகின்றன.

காங்கிரசார், ஓட்டுக்காக மட்டும் தான் கோவிலுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு ஹிந்து மதத்தின் மீதோ, ஹிந்துக்களின் மீதோ அக்கறை கிடையாது. இப்படி இருக்கையில், எந்த முகத்துடன் காங்கிரசார், சங்கராந்தியை கொண்டாடுவர். இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், பா.ஜ., தரப்பில் 'கருப்பு சங்கராந்தி' அனுஷ்டிக்கப்படும்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, ஏ.சி.பி.,யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும். முதல்வரும், அமைச்சர்களும் இங்கு வரவே கூடாது.

வக்பு சொத்துகளை கைப்பற்றுவதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement