பறவைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் நாளை துவக்கம்
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை முதல் 17ம் தேதி வரை, தமிழம் முழுதும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பூமியின் வடகோளத்தில் குளிர் அதிகரிக்கும் சமயத்தில், அங்குள்ள பறவைகள் தென்பகுதி நோக்கி வருவது வழக்கம். இந்தியா வரும் பறவைகளில் பெரும்பாலானவை, தமிழகத்துக்கு வருகின்றன.
ஆண்டுதோறும் அக்டோ பர் முதல் ஏப்ரல் வரை, இப்பறவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்லும். அது பற்றிய விபரங்களை திரட்ட, வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், தனித்தனி கணக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், 'பேர்டு கவுன்ட் இந்தியா' என்ற அமைப்பு மற்றும், 'இ பேர்டு' இணையதளம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான பொங்கல் கால பறவைகள் கணக் கெடுப்பு நாளை துவங்குகிறது.
வலசை பறவைகள் மட்டு மல்லாது, உள்ளூர் அளவில், எங்கு, எந்த வகை பறவைகள் இருக்கின்றன என்பது குறித்த விபரங்களும் திரட்டப்பட உள்ளன. இந்த விபரங்கள் உடனுக்குடன், 'இ பேர்டு' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதனால், தமிழகத்தில் ஏதாவது அரிதான பறவைகள் வந்திருந்தால், அதுகுறித்த விபரங்கள் உலகம் முழுதும் உள்ள பறவைகள் ஆர்வலர்கள், அமைப்புகள் பார்வைக்கு செல்லும். பொது மக்களும், அரசு துறையினரும் இந்த தளம் வாயிலாக, பறவைகள் வருகை குறித்த விபரங்களை அறியலாம்.
பறவைகள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வனத்துறையினர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பர் என, 'பேர்டு கவுன்ட் இந்தியா' அமைப்பினர் தெரி வித்துள்ளனர். கூடுதல் விபரங்களுக்கு, www.birdcount.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.