ஜெயலலிதா சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா ஐகோர்ட் உத்தரவு

7


பெங்களூரூ: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்ததால், வழக்குக்காக முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை ஏலம் விடும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.


இதனிடையே, சென்னையில் உள்ள ஜெயலலிதா சொத்துக்களை, அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணத்தை வைத்து, பெங்களூரூ உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்களை, தன்னிடம் ஒப்படைக்குமாறு, கர்நாடகா சிறப்பு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனு மீது பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 'ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது' என்று ஐகோர்ட் நீதிபதி அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய சிறப்பு கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்ட நீதிபதி, தீபாவின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.


ஏதேனும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால், சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement