புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை; புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்தது. கடந்த ஜூலை 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.
இந் நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி எம். சத்தியநாராயணன், தலைமையிலான ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (மத்திய சட்டம் 45/2023), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (மத்திய சட்டம் 46/2023), மற்றும் பாரதிய சாக்ஷ்யா அதிநியம், 2023 (மத்திய சட்டம் 47/2023) ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வுசெய்து அதன் பரிந்துரைகளை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவானது மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்கும்போது, அனைத்து தரப்பினர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் இணையதளம் மூலம் மாநில திருத்தங்கள் தொடர்பான தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க கோரி அழைப்பு விடுக்க இக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து, கருத்துக்கள் அல்லது ஆலோசனைகளை குழுவின் குறிப்பிட்ட வரம்புகளுக்குட்பட்டு சமர்ப்பிக்க விரும்பும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஆங்கிலம் அல்லது தமிழில் https://www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க கோரப்படுகிறது என்று இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.
அவ்வாறு இணையதளத்தில், தங்கள் ஆலோசனையின் மீது விரிவான முறையீட்டு மனுவினை சமர்ப்பிக்க விரும்பினால் கருவி உதவிக் குறிப்பில் (Tool Tip) குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பை (Format) கடைப்பிடிக்க வேண்டும்; இல்லையெனில், அம்மனு பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.