கோவை பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி; 5 பேர் கைது

7


கோவை: கோவை பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை உடையாம்பாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் முன்பு, தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணி கடையை ஒருவர் நடத்தி வந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இனிமேல் கோவில், பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் மாட்டிறைச்சி பிரியாணி கடை போடக் கூடாது என்று பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.


இதனால், அவருக்கும், அந்தக் கடை நடத்தி வந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரியாணி கடைக்காரர் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஊர் மக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.


இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீச ஆதி தமிழர் கட்சியினர் முயன்றுள்ளனர். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்து அக்கட்சியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்ய முயன்றனர். அப்போது, மாட்டிறைச்சி விவகாரத்தில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.


மேலும், போலீசாரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தரையில் படுத்து உருண்டனர். பிறகு, அவர்களை இழுத்துச் சென்று கைது செய்து, ஜீப்பில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Advertisement