தினமும் ஒரு குப்பை மலை உருவாகும்; எதிர்கால சென்னைக்கு காத்திருக்கும் இமாலய சவால்!
சென்னை: சென்னையில் இப்போது உற்பத்தியாகும் குப்பையை போல், மும்மடங்கு குப்பை, 2051ம் ஆண்டில் உற்பத்தியாகும்; அதை சமாளிப்பது, எதிர்கால சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு இமாலய சவாலாக இருக்கும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
சென்னை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், குப்பை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. தொழில் நிறுவனங்கள், வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஏராளமான பேர் இங்கு குடியேறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, தினசரி உற்பத்தியாக கூடிய குப்பையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைவலியாக இருக்கிறது.
குப்பை உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நுகர்வுத்தன்மை தான். வீடுகளில் சமையல் செய்து மட்டுமே உண்ட காலம் மாறி, உணவகங்களில் பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது அதிகரித்துள்ளது. இதுவும் குப்பை பெருக முக்கிய காரணம் என்கின்றனர், அதிகாரிகள். மாநகரில் உருவாகும் குப்பையை தூய்மை பணியாளர்கள் அகற்றுகின்றனர்.
மக்கும், மக்காத இரு வகைகளாக பிரிக்கப்பட்டு குப்பை கிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாநகராட்சியின் பெருங்குடி, கொடுங்கையூர் கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அழிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது, சென்னை மாநகராட்சி தினமும் 5,900 டன் கழிவுகளை அகற்றுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் குப்பை கழிவு உற்பத்தி மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும்.வரும் 2051 ஆண்டில் சென்னையில் தினசரி உற்பத்தியாக கூடிய குப்பை 17,422 டன்னாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி மேலும் விரிவுபடுத்தப்படும் பட்சத்தில், உற்பத்தியாகும் குப்பையும் அதற்கு தகுந்தபடி அதிகரிக்கும்.
பெருநகரங்களில், மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை அகற்றுவது முக்கிய பிரச்னையாக உள்ளது. அது மட்டுமின்றி, திறந்தவெளி, ஏரி, குளங்களில் குப்பை கொட்டுவதும் அதிகரிக்கிறது. குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தயார் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், மறுசுழற்சி அல்லது வளம் மீட்பு மையங்களை விரிவுபடுத்துதல், மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களை ஏற்படுத்துதல், பயோ சி.என்.ஜி., எனப்படும் உயிரி எரிபொருள் உற்பத்தி மையங்களை ஏற்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவற்றை செயல்படுத்த, குப்பைகளை வாங்கும் இடத்திலேயே 100 சதவீதம் தரம் பிரித்து வாங்க வேண்டும்; அதற்கு தகுந்த விழிப்புணர்வும், கண்டிப்பான அமலாக்கமும், கண்காணிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் சென்னையில் மக்கள் தொகையும் அதிகரிக்கும்; மிச்சம் மீதியுள்ள காலியிடங்களும் வீடுகளாகி விடும் சூழலில், குப்பை பிரச்னைக்கு கண்ணுக்கெட்டிய துாரம் வரை தீர்வுகள் தென்படவில்லை.
கடந்தாண்டு சென்னையில் பெய்த மழையானது, திடக்கழிவு மேலாண்மையில் இருந்த குளறுபடிகளை அம்பலப்படுத்தியது. பல இடங்களில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள் அடைத்துக் கொண்டன. அவற்றை அகற்றுவதற்கு பெரும்பாடு பட வேண்டிய நிலை ஏற்பட்டது.இத்தகைய நிலையில், 2051ம் ஆண்டு உருவாகப்போகும் குப்பை, இப்போது இருப்பதைப்போல மும்முடங்காக இருக்கும் என்பதை, நிலைத்தாலே மலைப்பாக இருக்கிறது.
தினமும் ஒரு மலை போன்ற குப்பையை அழிப்பது என்பது, மாநகராட்சியை நிர்வாகம் செய்வோருக்கு இமாலய சவாலாக இருக்கும் என்கின்றனர், துறை வல்லுநர்கள்.