சங்கராந்திக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு 130 உணவு வகைகளுடன் அசத்தல் விருந்து
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகையை கொண்டாட மாமியார் வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளைக்கு, 130 வகை உணவுகளுடன் அசத்தல் விருந்து பரிமாறப்பட்டது.
விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், பிற மாநிலங்களிலும் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
திருமணம்
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் தமிழகத்துக்கு இணையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மகர சங்கராந்திக்கு வீட்டிற்கு வரும் புதுமாப்பிள்ளைக்கு புது ஆடைகளுடன், பிரமாண்ட விருந்து படைப்பதை பெண் வீட்டார் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், தெலுங்கானாவைச் சேர்ந்த மாமியார் ஒருவர், தன் மகள் மற்றும் மருமகனுக்கு, 130 வகை உணவுகளை பரிமாறி அசத்தியுள்ளார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சரூர் நகரைச் சேர்ந்த கிராந்தி - கல்பனா தம்பதி, தங்கள் மூத்த மகளை காக்கிநாடாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.
புதுமண தம்பதியை, சங்கராந்தி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, மல்லிகார்ஜுன் மற்றும் அவரது மனைவி ஹைதராபாத் வந்தனர்.
அவர்களை உற்சாகமாக வரவேற்று உபசரித்த கல்பனா தம்பதி, நேற்று மதியம் பிரமாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பாரம்பரிய உணவு வகைகள் துவங்கி, விதவிதமான அசைவ உணவுகள், பலவிதமான இனிப்புகள் வரை 130 வகையான உணவுகள் மாப்பிள்ளைக்கும், மகளுக்கும் பரிமாறப்பட்டன.
பாராட்டு
சாப்பிட அமர்ந்த மல்லிகார்ஜுன், தலைவாழையில் அறுசுவை உணவுகளை பரிமாறிய மாமியாரின் உபசரிப்பில் திக்குமுக்காடி போனார்.
அதேசமயம், மாமியார் கல்பனாவின் பிரமாண்ட விருந்தை காண, ஊர் மக்களும் கூடியதால் சரூர் நகர் களைகட்டியது.
சங்கராந்திக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு மாமியார் கல்பனா வைத்த விருந்து சமூக வலைதளங்களில் பரவி பாராட்டையும் பெற்றுள்ளது.