வங்க தேசத்தினர் பதுங்கலா? சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில், 29 பேர் கைதாகி உள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்க தேசத்தினர் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வங்கதேசத்தில் செயல்படும், 'அன்சல்லாஹ்' என்ற அமைப்பு, அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவிலும் கிளைகளை பரப்பி வருகிறது. அதேபோல, வங்கதேசத்தின் ஜமா உத் - உல் - முஜாஹிதீன் என்ற அமைப்பும், மேற்கு வங்கத்தில் ரகசியமாக செயல்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு பக்கபலமாக உள்ளது.
23 - 28 வயது
இந்த அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊடுருவி வருகின்றனர். அவர்கள் குறித்து, தமிழக போலீசாரும், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அருள்புரம், முருகம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த, 23 - 28 வயதுடைய வங்க தேசத்தினர், 29 பேர், பல்லடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் கூட்டாளிகள், சென்னை அருகே உள்ள படப்பை, மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், தனியார் நிறுவன ஊழியர்கள் போல பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
போலி சான்றிதழ்
அந்த இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'வங்க தேசத்தினர், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் போல போலி சான்றிதழ் கொடுத்து, தனியார் நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்.
தற்போது, பொங்கல் விடுமுறைக்கு மற்ற ஊழியர்கள் சென்று விட்டதால், தொழிற்சாலைகளின் தங்கும் இடங்களில், வடமாநிலத்தவர்கள் மட்டுமே அதிகம் உள்ளனர். அவர்களில் வங்க தேசத்தினர் உள்ளனரா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.