தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் காணும் பொங்கலன்று கண்காணிப்பு
ராமநாதபுரம்: -தமிழக கடற்கரையோரப்பகுதிகளில் காணும் பொங்கல் தினத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலுக்குள் மீன் பிடி படகுகளில் மக்களை அழைத்து செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணிகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 1077 கி.மீ., நீளமுள்ள கடற்கரை உள்ளது. 14 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன. 600 மீனவ கிராமங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். கடற்கரைப்பகுதிகளுக்கு செல்லும் போது தடையை மீறி மீன்பிடி படகுகளில் மக்களை கடலுக்குள் சிலர் அழைத்து செல்வார்கள்.
கடந்த காலங்களில் படகுகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தமிழக அரசும், மரைன் போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் கடற்கரையோரப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தடையை மீறும் படகுகள், மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அனுமதிக்கப்பட்ட சுற்றுலா படகுகளில் கூட முறையான பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து தான் அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு மட்டுமே படகில் செல்ல அனுமதிக்க வேண்டும். இது போன்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். கடலோர பாதுகாப்பு போலீசார் இதற்கான ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர்.