ஆடம்பர செலவு வேண்டாம்... காம்ப்ளி வாழ்க்கை சொல்லும் பாடம் * சேமிக்க வழிகாட்டும் சிந்து உணர்ச்சிவசம்

மும்பை: ''காம்ப்ளி 'வீடியோ' பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன். ஆடம்பரமாக செலவு செய்யாதீர். வீரர்கள் சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும். சரியாக முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நிதி நெருக்கடி ஏற்படாது,'' என சிந்து தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, 52. மும்பையில் 1988ல் நடந்த ஹாரிஸ் ஷீல்டு டிராபி தொடரில் ஷர்தாஷ்ரம் பள்ளிக்காக காம்ப்ளி (349), சச்சின் (326) சேர்ந்து 664 ரன் சேர்த்தனர். இருவரும் இந்திய அணிக்காக விளையாடினர்.
இளம் வயதில் சாதனை
காம்ப்ளி ரன் மழை பொழிந்தார். இளம் வயதில் டெஸ்டில் இரட்டை சதம் (224 ரன், 21 ஆண்டு, 32 நாள், எதிர், இங்கிலாந்து, 1993, மும்பை) அடித்த இந்திய வீரர் என சாதனை படைத்தார். இந்த சாதனை இன்றளவும் நீடிக்கிறது. டெஸ்டில் அதிவிரைவாக 1000 ரன் (14 இன்னிங்ஸ்) எட்டிய இளம் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். 104 ஒருநாள் போட்டி (2, 477 ரன்), 17 டெஸ்டில் (1,084) விளையாடினார். 2011ல் ஓய்வு பெற்றார்.
வறுமையின் பிடியில்
ஆடம்பரமாக வாழ்ந்தார். மதுவுக்கு அடிமையானார். உடல் அளவில் பாதிக்கப்பட்டார். நெஞ்சு வலி ஏற்பட 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை எடுத்துக் கொண்டார். குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாததால், சம்பாதித்த பணம் கரைந்தது. வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது பி.சி.சி.ஐ., மாதம் தோறும் வழங்கும் ரூ. 30,000 'பென்ஷன்' தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்.
மறுபக்கம் சர்வதேச அளவில் சதத்தில் சதம் அடித்த சச்சின், சாதனை நாயகனாக உயர்ந்தார். தனது சிறப்பான நடத்தையால், கிரிக்கெட் அரங்கில் உச்சம் தொட்டார். ரூ. 1400 கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார்.
நெகிழ்ச்சி தருணம்
சமீபத்தில் மும்பையில் நடந்த பயிற்சியாளர் ராமாகாந்த் அச்ரேக்கரின் நினைவுநாள் நிகழ்ச்சியில் காம்ப்ளி பங்கேற்றார். அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப் போயிருந்தார். நண்பர் சச்சின் கையை இறுகப்பிடித்துக் கொண்ட தருணம் நெகிழ்ச்சியானது. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டி, சிறுநீர் பாதையில் தொற்றால் அவதிப்பட்டார். புத்தாண்டின் துவக்கத்தில் தான் 'டிஸ்சார்ஜ்' ஆனார். காம்ப்ளி-சச்சின் சந்திப்பு 'வீடியோ' இணையதளத்தில் 'வைரல்' ஆனது.
முதலீடு முக்கியம்
இது குறித்து இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து கூறியது:
காம்ப்ளியின் 'வீடியோ' அதிர்ச்சி அளித்தது. அவரது நிலைமையை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன். ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது. சிறந்த வீரராக இருக்கும் போது நிறைய பணம் சம்பாதிக்க முடியும். இதை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது முக்கியம். சம்பாதித்த பணத்தை சிறப்பான முறையில் சேமிக்க வேண்டும். எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். வருமான வரி செலுத்துவது அவசியம். இதை செய்ய தவறினால், சிக்கல் ஏற்படும்.
வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சரியான நபர்கள் வழிகாட்டுவது அவசியம். ஆரம்பத்தில் என்னை பெற்றோர் பார்த்துக் கொண்டனர். தற்போது எனது முதலீடுகளை கணவர் கவனித்துக் கொள்கிறார். இதனால் எனக்கு இதுவரை நிதி நெருக்கடி ஏற்பட்டதில்லை.
இவ்வாறு சிந்து கூறினார்.

Advertisement