ஸ்டாலின் - சிதம்பரம் திடீர் சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முன்னாள்
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
இது குறித்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
பொங்கல் தினத்தை ஒட்டி முதல்வருக்கு சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
சிதம்பரத்தின் தாய் லட்சுமியின் நினைவாக, 'லட்சுமி வளர்தமிழ் நுாலகம்' என்ற பெயரில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் பல்கலை வளாகத்தில் 13 கோடி ரூபாய் செலவில் இந்த நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நுாலகத்திற்கு அடுத்தபடியாக, பெரிய நுாலகமாக இந்த நுாலகம் கருதப்படுகிறது.
இந்த நுாலகத்தை அழகப்ப செட்டியார் பல்கலையிடம் அர்ப்பணிக்கும் விழா ஜன.21ம்தேதி காரைக்குடியில் நடக்கவுள்ளது.
நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர்கள் பல்கலைகளின் முன்னாள் வேந்தர்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நுாலகத்தில் 2 லட்சம் தமிழ் புத்தகங்கள் மட்டும் இடம் பெறுகின்றன. நுாலக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் கருத்தரங்கம் நடத்தும் அரங்கமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் படிக்கும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கும் இந்த நுாலகம் பயனுள்ளதாக அமையும். நுாலகத்தை திறக்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக சிதம்பரம் ஸ்டாலினைச் சந்தித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-