மன்னார் வளைகுடா கடலில் நிறைஞ்சிருக்கு அழகும்.. ஆபத்தும்; ஜெல்லி மீன்களை ரசிப்பவரா நீங்கள்



சாயல்குடி: மன்னார் வளைகுடா கடலில் காணப்படும் அழகிய ஜெல்லி மீன்களை
சுற்றுலாப்பயணிகள் ரசிக்கும் நிலையில் அழகும் ஆபத்தும் நிறைந்தவைகளாக இந்த ஜெல்லி மீன்கள் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


அரிய வகை மீன் இனங்களின் வாழ்விடமாக மன்னார் வளைகுடா கடல் உள்ளது. மனிதர்கள் உண்பதற்கு பயனற்றதாகவும், பார்ப்பதற்கு அழகானதாகவும், அதே நேரம் ஆபத்து நிறைந்த மீனாக ஜெல்லி மீன்கள் பார்க்கப்படுகிறது.


'ஜெல்லி பிஷ்' என ஆங்கிலத்திலும் சொரிமுட்டை என தமிழிலும் இவை அழைக்கப்படுகின்றன. இவை நிடேரியா உயிரின தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினம். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரை பகுதிகளிலும் வாழும் தன்மை கொண்டவை.
இவை கரையில் ஒதுங்கி கிடக்கும் போது பார்வைக்கு மிக அழகாக தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்கின்றன. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
Latest Tamil News

இதன் உடல் தோற்றம் விசித்திரமாக இருக்கும். தலைப்பகுதி குடை வடிவத்திலும், அதன் கீழ்பகுதியில் கைப்பிடி போன்ற நீண்ட வாலும் உள்ளது. வால் பகுதியில் நுனியின் ஒரு துளையில் வாயும், மற்றொரு துளை கழிவு நீக்கும் உறுப்பாக உள்ளது.
குடை போன்று அமைந்துள்ள தலைப்பகுதியின் ஓரம் எட்டு மடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்மடல்களுக்கு கீழே உணர்கொம்புகள் நிறைந்துள்ளன. குடைப்பகுதியின் விளிம்பில் ஏராளமான குழல் போன்ற நுால்கள் அமைந்துள்ளது. இவை உணவை பற்றுவதற்கும் வாயின் அருகில் கொண்டு செல்வதற்கு உதவுகின்றன.


ஜெல்லி மீன்களுக்கு மூளையோ, இதயமோ, எலும்புகளோ, ரத்தமோ, கண், காதுகளோ காணப்படுவதில்லை. ஜெல்லி மீன்களின் மொத்த உடற்பகுதிகளில் 95 சதவீதம் பகுதி நீராலும் மீதி 5 சதவீதம் மட்டுமே திடப்பொருளாலும் ஆனது.


உடலில் இடைவெளி இருக்கும் நரம்புகள் ஒளி, மணம் நீரின் அழுத்தம் மற்றும் வேறு துாண்டல்களை உணரும் உணர்வுகளாக தென்படுகிறது. இதன் உடல் நரம்புகளை வைத்தே இவை சூழலை அறிந்து கொள்ள உதவுகின்றன. இவற்றின் உடல் ஒளி ஊடுருவக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதால் தண்ணீரில் இருந்தாலும் இவை இருப்பதை எளிதாக கவனிக்க முடியாது.


மன்னார் வளைகுடா பகுதிகளில் ஜெல்லி மீன்கள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் காணப்படுகின்றன. இவற்றை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. மீனவர்கள் கூறியதாவது:
ஜெல்லி மீன்கள் செங்குத்தாக கீழ்நோக்கியும் மேல் நோக்கியும் நகர்வதோடு அவை அசைவுக்கும் நீரோட்டத்திற்கும் ஏற்ப இரு பக்கங்களிலும் நகரும் தன்மை கொண்டது. இவற்றால் விரைவாக நீந்த முடியாது. மழைக்காலங்களில் அதிகமாக கடற்கரையில் ஜெல்லி மீன்கள் தென்படும்.


ஆண் தனது உயிரணுவையும் பெண் மீன் தனது சினை முட்டையையும் தண்ணீரில் விடுகின்றன. நீரில் விடப்பட்ட முட்டைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கரு உருவாகின்றன. இப்பருவத்தில் அவை தரையை நோக்கி பயணித்து பாறைகளில் தொற்றிக் கொள்கின்றன.
இப்பருவத்திற்கு பாலிப் என பெயர். அது கடல் பாசி தாவரம் போல் பாறையில் மெதுவாக வளர்கிறது. சில நாட்களில் வளர்ந்தவுடன் பாறையில் இருந்து பிரிந்து ஜெல்லி மீன்களாக உருவெடுக்கின்றன. ஆயுட்காலம் ஆறு மாதங்கள்.


மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிக்கும் போது இவ்வகையான ஜெல்லி மீன்களின் தாக்குதல் ஏற்படும். இதனால் மனிதர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுவதுடன் இதயத்தையும் செயல் இழக்க செய்யும். இதன் நச்சு ஆபத்தை விளைவிக்கும்.


எனவே ஜெல்லி மீன்களின் அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவற்றை கைகளால் தொடுவது ஆபத்தை விளைவிக்கும் என்றனர்.

Advertisement