ம.பி.,யில் கட்டுமான பணியின் போது விபத்து; கிணற்றுக்குள் புதையுண்ட தொழிலாளர்கள் 3 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
போபால்; மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த கிணறு திடீரென உள்வாங்கி கீழே இறங்கியது. இதில், இடிபாடுகளில் சிக்கிய மூவரை மீட்கும் முயற்சி முழு வீச்சில் நடக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கிராமத்தில் கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது கிணறு திடீரென உள்வாங்கி கீழே இறங்கியது. இதில், இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், உள்ளூர் மக்கள் மற்றும் ஜே.சி.பி., உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றுக்குள் புதையுண்ட தொழிலாளர்கள் மூன்று பேரை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களது உறவினர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில், கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
இது குறித்து, சிந்த்வாரா மாவட்ட கலெக்டர் ஷீலேந்திர சிங் கூறியதாவது: குனாஜிர் குர்த் கிராமத்தில், கிணறு அமைப்பதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய மீட்டுப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.