இஸ்ரேல் - ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது?

3


கெய்ரோ: இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.


இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.



இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ல் பதவி ஏற்க உள்ளார். 'நான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் எச்சரித்தார்.


இதை தொடர்ந்து, போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேல் அளித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் படையினர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement