கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு சிக்கல்! வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி; மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக டில்லி மாஜி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்கு நடத்த அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
டில்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரு,2800 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், வழக்கில் இருந்து விடுதலையான பின்னரே முதல்வராக பதவியில் அமருவேன் என்று கூறி இருந்தார். இந் நிலையில் இந்த வழக்கில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா இருவர் மீதும் வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது டில்லி சட்டசபை தேர்தல் தேதி பிப்.5ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜ., ஆம் ஆத்மி, காங். உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களம் காண்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, டில்லி தேர்தல் கள அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்தாண்டு நவ.6ம் தேதி சுப்ரீம்கோர்ட் ஒரு முக்கிய தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டப்படி, அரசு ஊழியர் ஒருவரை, அரசின் முன் அனுமதியின்றி பணமோசடி வழக்கில் கைது செய்ய முடியாது என்று கூறி இருந்தது.
இதை தொடர்ந்து, வழக்கு தொடர அனுமதி கோரி டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் ஒன்றையும் எழுதியது. அதன் பின்னர், சக்சேனாவும் வழக்கு தொடர ஒப்புதல் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.