கனிம வள கொள்ளை தடுக்க தொழில்நுட்ப கண்காணிப்பு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோவை: சட்ட விரோத கனிம வள கொள்ளையை தடுக்க, அண்ணா பல்கலையுடன் இணைந்து ஆறு மாதத்துக்குள், தொழில்நுட்ப ரீதியாக கண்காணிப்பு அமைப்பு உருவாக்க, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள் மற்றும் பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக லோடு, லோடாக செம்மண் வெட்டி கடத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்து வருகிறது. கனிம வள கொள்ளையை தடுக்க, எத்தகைய கண்காணிப்பு முறையை பின்பற்ற வேண்டுமென, ஐகோர்ட் நீதிபதிகள், தங்களது உத்தரவில் தெரிவித்திருக்கின்றனர்.
அதில், கூறியிருப்பதாவது:
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், 2016ல் கனிம வள கண்காணிப்பு அமைப்பை துவக்கியிருக்கிறது; இது, செயற்கைக்கோள் சார்ந்த கண்காணிப்பு அமைப்பு. சட்ட விரோத கனிம வள குற்றங்களை தடுக்க, மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான பயனர் ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு', மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிந்து, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, அண்ணா பல்கலையுடன் இணைந்து, இந்த அமைப்பை உருவாக்க வேண்டும். தொலைநோக்கி அல்லது செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கைக்கோள் தொழில்நுட்பம் என, எந்தவொரு தொழில்நுட்பத்தையாவது பயன்படுத்தலாம்.
இதற்கான விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சாத்தியக்கூறுகளை சரிபார்த்து, ஆறு மாதத்துக்குள் அமைப்பை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, காலக்கெடு வாரியாக கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.