போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 34 லட்சம் இழந்த பெண்

5


கோவை: கோவை, இடையர்பாளையம், குமரன் நகரை சேர்ந்தவர் மோனிசா, 32. இவர் இணையத்தில் பங்கு சந்தை குறித்து பார்த்துள்ளார்.


டிரேடிங் செய்வது குறித்தும், இணையத்தில் தேடி வந்தார். இந்நிலையில், இவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணை, 'ரேட்பின் ஸ்டடி குரூப் அண்ட் கோட்' என்ற வாட்ஸ் ஆப் குழுவில், அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்துள்ளனர்.


இதனையடுத்து, மோனிசாவின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, போலி பங்கு சந்தை செயலியை அனுப்பினர். அதன் மூலம், முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, விற்பது, ஐ.பி.ஓ., உள்ளிட்டவை குறித்து, வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்து வந்துள்ளனர். மோனிசாவையும் முதலீடு செய்யும் படி கேட்டனர்.


இதை நம்பி, மோனிசா மோசடி நபர் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, ரூ. 34.48 லட்சம் அனுப்பினார். அந்த பணம், மோசடி நபர்கள் அளித்த செயலியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து, மோனிசா வர்த்தகம் செய்துள்ளார். அதில் வரும் லாப பணமும் செயலியில் காட்டியுள்ளது. ஒரு கட்டத்தில், ரூ.50 லட்சத்துக்கு மேல் செயலியில் இருப்பு இருந்துள்ளது.


அந்த பணத்தை எடுக்க, மோனிசா முயற்சித்தார். அப்போது அவர்கள், மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என கூறினர். அப்போது தான் மோனிசாவுக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.


கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement