29 மாவட்ட நுாலகர் பணியிடம் நிரப்புவதில் சிக்கல்! தடைகளை தகர்த்தெறியுமா பொது நுாலகத்துறை?


தமிழகத்தில் காலியாகவுள்ள மாவட்ட நுாலக அலுவலர் பணியிடத்தை நிரப்புவதற்கு இடையூறு ஏற்படுத்தும் முட்டுகட்டைகளை தகர்த்தெறிய, பொது நுாலகத்துறை முனைப்புகாட்ட, ஒட்டுமொத்த நுாலகர்களும் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழக பொது நுாலகத்துறையில், 36 மாவட்ட மைய நுாலகங்கள் உள்ளன. அதனுடைய ஒவ்வொரு மாவட்ட நுாலக அலுவலரும், தன் கட்டுப்பாடில் உள்ள மைய நுாலகம், முழுநேர கிளை நுாலகம், கிளை நுாலகம், ஊர்புறநுாலகம், பகுதிநேர நுாலகம், நடமாடும் நுாலகம் என, அனைத்து நுாலகப்பணிகளையும் செம்மைப்படுத்த வேண்டும்.


தற்போது திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, சேலம், சென்னை, திருவள்ளூர், ஈரோடு என 7 மாவட்டங்களில் மட்டுமே மாவட்ட நுாலக அலுவலர்கள் பணியில் உள்ளனர். மீதமுள்ள 29 மாவட்டங்களில், நிரந்தர நுாலக அலுவலர் இல்லை.


எனவே, அருகில் உள்ள மாவட்ட நுாலக அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, 29 மாவட்ட நுாலக நிர்வாகம் வழிநடத்தப்படுவதால், அதன் செயல்பாடு கேள்வி குறியாக உள்ளது.


காரணம், பணியிடத்தில் இருந்து, கூடுதல் பொறுப்பு வகிக்கும் மாவட்டத்துக்கு குறைந்தது 30 கி.மீ.,துாரம் கடந்து செல்லும் நடைமுறை நிர்வாக சிக்கலால், அவலநிலை தொடர்கிறது. இதேநிலை நீடித்தால், நுாலக சேவை பெயரளவில் இருக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை பணியாளர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:

பதவி உயர்வு மூலம் 75 சதவீதம், டி.என்.பி.எஸ்.சி., மூலம் 25 சதவீதம் முறையே, மாவட்ட நுாலக அலுவலர் பணியிடத்தை நிரப்ப, உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஓராண்டுக்கு முன் தீர்ப்பளித்தது. அதை செயல்படுத்த தமிழக பொது நுாலகத்துறை, இன்னமும் முனைப்புகாட்டவில்லை.


இந்நிலையில், மாவட்ட நுாலக அலுவலக கண்காணிப்பாளர்கள் சிலர், தங்களுக்கும் பதவி உயர்வு மூலம், மாவட்ட நுாலக அலுவலர் பணி வழங்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை பரிசீலனை செய்யும்படி நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்து, இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்தும், அதற்கு எதிராக, பொது நுாலகத்துறை மேல்முறையீடு செய்வதில் சுணக்கம் காட்டி வருவதால், மாவட்ட நுாலக அலுவலர் பணியிடம் நிரப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.


முதல் நிலை நுாலகர், நுாலக ஆய்வாளர், நுாலக கண்காணிப்பாளர் என, இதில், ஏதாவது ஒரு பணியில் குறைந்தது ஐந்தாண்டு நிறைவு செய்தால் மட்டும், மாவட்ட நுாலக அலுவலர் பதவி பெறலாம் என்பது நுாலக விதிமுறை. டி.என்.பி.எஸ்.சி., நியமன முறைக்கும், இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.


அதனால், குறிப்பிட்ட எந்த தகுதியும் இல்லாத அலுவலக கண்காணிப்பாளருக்கு, மாவட்ட நுாலக அலுவலர் பதவி, சாத்தியமில்லாத ஒன்று. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், பணி பதிவேடு பராமரித்தல், பில் பாஸ் பண்ணுதல் போன்ற நடைமுறைக்கு பழகிய அவர்களுக்கு, நுாலக செயல்பாடு, அதனை வழிநடத்தும் அணுகுமுறையை அறவே அறியாதவர்கள்.


எனவே நுாலக சட்டப்படி, அலுவலக கண்காணிப்பாளர், மாவட்ட நுாலக அலுவலர் பதவி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. இந்த உண்மையை எடுத்துக்கூறி, சங்கத்தின் சார்பில், நீதிமன்ற மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம். அப்போது தான், காலியிடத்தை நிரப்ப வழிபிறக்கும்.

இவ்வாறு அவர் கூறினர்.





- நமது நிருபர் -

Advertisement