தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு படிப்படியாக சரிவு

நாமக்கல்: தமிழகத்தில், 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் உள்பட, மொத்தம், 44 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு, கரும்பு டன்னுக்கு நியாயமான ஆதாய விலை அறிவிக்கிறது. இதையடுத்து, மாநில அரசு பரிந்துரை விலையை சேர்த்து, கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி வந்தது.


ஆனால், தமிழக அரசு பரிந்துரை விலையை, கடந்த, 2017 முதல் நிறுத்திவிட்டது. அதற்கு பதில், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில், கரும்புக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இது தொடர்பாக, அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.


ஆனால், அதை கண்டுகொள்ளாமல் அரசு உள்ளது. அதனால், ஆண்டுக்காண்டு கரும்பு சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.


அதன்படி, நடப்பு, 2024 - 25ம் அரவை பருவத்தில், 95 லட்சம் டன்னாக கரும்பு உற்பத்தி சரிந்துள்ளது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது.


இதுகுறித்து, இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பான, 'சிபா'வின், முன்னாள் தேசிய தலைவர் விருத்தகிரி கூறியதாவது:


தமிழகத்தில், 44 சர்க்கரை ஆலைகள் இருந்தன. அதில், 14 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நடப்பு, 2024 - 25ம் ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் விலை, 10.25 சதவீதம் சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு, டன் ஒன்றுக்கு, 3,400 ரூபாய், 9.5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான திறன் கொண்ட கரும்புக்கு, டன் ஒன்றுக்கு, 3,150 ரூபாய் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில், சர்க்கரை கட்டுமானம், 9.02 சதவீதமாக உள்ளது. அதனால், மத்திய அரசு அறிவித்த விலைக்கு ஈடுகட்ட ஊக்கத்தொகையை, தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், பஞ்சாப், உத்ராஞ்சல், ஹரியானா போன்ற மாநிலங்கள், மத்திய அரசு அறிவித்த விலைக்கு மேல், ஊக்கத்தொகை வழங்குகிறது. அதேபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும்.


மொத்தம், 1 ஏக்கர் கரும்பு உற்பத்தி செய்வதற்கு, 1.20 லட்சம் ரூபாய் செலவாகிறது. 1 டன்னுக்கு, 2,500 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அரசு வழங்கும், 3,150 ரூபாயில், வெட்டுக்கூலி, 1,200 முதல், 1,500 ரூபாய் வரை செலவாகிறது.


மீதம், 1,650 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அதனால், கடும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். அதன் காரணமாக, கரும்பு சாகுபடி பரப்பு வெகுவாக சரிந்துள்ளது. விவசாயிகளும், மாற்று பயிருக்கு மாறிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement