நடிகை புகாரில் கைதான பாபி செம்மனூர் ஜாமினில் விடுதலை

2


கொச்சி: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட, தொழிலதிபர் பாபி செம்மனூர் ஜாமினில் விடுதலையானார்.


மலையாள நடிகை ஹனி ரோஸ், 33. தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாக சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் ஹனிரோஸ் புகார் அளித்தார்.


இறுதியில், இது குறித்து கொச்சி போலீசில் அவர் புகார் அளித்தார். சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், கேரளா மட்டுமின்றி சர்வதேச அளவில், 'செம்மனுார் ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் தொழிலதிபர் பாபி செம்மனுாரை கைது செய்தனர்.


கொச்சியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பாபி செம்மனுாரின் ஜாமின் மனுவை நிராகரித்ததுடன், 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட், ஜாமின் வழங்கியது.
இனி இதேபோன்ற புகார் வந்தால் நிச்சயம் ஜாமின் வழங்கப்பட மாட்டாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தனர்.


ஆனால், ஜாமின் பெற்ற நகைக்கடை அதிபர் பாபி செம்மனூர், சிறையில் இருந்து வெளியேற மறுத்தார். பல்வேறு காரணங்களால் சிறையிலிருந்து விடுதலை பெற முடியாத கைதிகளுக்கு ஆதரவாக, நானும் சிறையில் இருந்து விடுதலை ஆக மாட்டேன் என்று கூறி ஜாமினில் வெளியேற செம்மனூர் மறுத்தார்.


ஜாமின் உத்தரவுடன் வந்த தனது வக்கீல்களிடமும் இதே கருத்தை அவர் தெரிவித்தார். இதனால் அவர் விடுதலை ஆவாரா, சிறையிலேயே இருப்பாரா என்று தெரியாத நிலை ஏற்பட்டது.


அவரது இத்தகைய திடீர் நிலைப்பாடு, கோர்ட் அவமதிப்பிற்கு சமம் என்றும் கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று காலை அவர் கக்கநாடு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் மீண்டும் கோர்ட்டில் ஆராயப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement