திருச்செந்துார் கடற்கரையில் மணல் அரிப்பு; ஜன., 17ல் ஹிந்து முன்னணி போராட்டம்
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கடற்கரையில் 7 அடி ஆழத்திற்கு மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆபத்தான நிலையில் நீராடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணி அமைப்பினர் வரும் 17ல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இக்கோவில் முன் உள்ள கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடிய பின் சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இங்குவரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. திருச்செந்துார் கடற்கரையின் தென்புறம், அமலிநகர் பகுதியில் கடலில் புதிதாக துாண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு இடத்தில் அமைக்கப்படும் துாண்டில் வளைவால் அங்கு கடல் அலையின் சீற்றம் குறைக்கப்படும் நிலையில், அதன் அருகில் மற்ற இடங்களில் அலைகள் அதிகமாக எழுந்து மண் அரிப்பை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி, உவரி பகுதிகளிலும், துாத்துக்குடி மாவட்ட கடற்கரைகளிலும் இத்தகைய கடற்கரை மணல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் வழக்கத்துக்கு மாறாக 7 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துாத்துக்குடி தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி அமைப்பினர் ஜன., 17 மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் அமைதியான முறையில் பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.