தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்படுத்த அரசு முன்வருமா?
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமாயண வரலாற்றில் இலங்கை மன்னன் ராவணன் சிறைபிடித்த சீதா தேவியை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடலில் ராமர், லட்சுமணர் வானர சேனைகளுடன் பாலம் அமைத்தனர். பின் இலங்கையில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தனுஷ்கோடி திரும்பினர்.
புரட்டிப் போட்டது புயல்
அப்போது ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி (வில், அம்பு) என பெயர் எழுந்தது. இதனால் பல ஆண்டுகளாக தனுஷ்கோடி கடலில் பக்தர்கள் புனித நீராடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நீராடி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து தனுஷ்கோடிக்கு சிறிய படகில் பக்தர்கள் சென்று வந்தனர்.
கடந்த 1914ல் ஆங்கிலேயர்கள், பாம்பனில் இருந்து ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தையும் துவக்கினர். இதன் பின் வணிக நகரமாக உருவெடுத்தது. இத்துடன் சர்ச், கோவில், ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம், தங்கும் விடுதி கட்டடங்கள் உருவானது. வணிக நகரமாகவும் மாறியது.
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1964 டிச., 22 நள்ளிரவு ஏற்பட்ட புயல் தனுஷ்கோடியை புரட்டிப் போட்டதால் இங்கிருந்த சர்ச், கோவில்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் இடிந்து சின்னாபின்னமாகின. அன்று முதல் தனுஷ்கோடிக்கு அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக அரசு அறிவித்தது.
புத்துயிர் கொடுத்த பிரதமர் மோடி :
பிரதமராக பதவி ஏற்ற மோடி நாட்டின் தென்கோடி முனையில் பாதுகாப்பு அரணாக உள்ள தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்து 2017ல் திறந்து வைத்தார். அன்று முதல் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வருகின்றனர். ஆனால் அங்கு ராமாயண வரலாற்றை சொல்லும் எந்த அடையாளங்களும் இல்லை.
தனுஷ்கோடியில் ராமரின் பிரம்மாண்ட சிலை, ராமாயண வரலாற்றை மக்களுக்கு விளக்கும் காட்சி, சிற்பங்கள், ஓவியங்கள் அமைத்தால், சுற்றுலா பயணியரின் வருகை அதிகரிக்கும். மேலும் இளம் தலைமுறை மனதில் ராமாயண வரலாற்றை பதிய வைக்க முடியும்.