எந்த சூழ்நிலையும் சமாளிக்க ராணுவம் தயார்; தலைமை தளபதி உபேந்திர திவேதி திட்டவட்டம்
புதுடில்லி: எந்த சூழ்நிலையையும் சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது என தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
இந்திய ராணுவம் உருவாக்கப்பட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறியதாவது:
புனேவில் ராணுவ தின கொண்டாட்டங்கள், பாரம்பரியத்துடன் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது.
வடக்கு எல்லையில் உள்ள சூழ்நிலை உணர்வுப்பூர்வமானது. வடக்கு எல்லையில் நவீன கருவிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி பாராட்டு
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ராணுவ நாளான இன்று நமது நாட்டின் பாதுகாப்பின் காவலராக விளங்கும் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்
ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த தைரியமிக்கவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம்.
நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடர்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதில் இந்திய ராணுவம் முத்திரை பதித்துள்ளது. இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து
இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கை:
இந்திய எல்லைகளை இரவும் பகலும் தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் பாதுகாக்கும் தைரியமிக்க ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நாள் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் உங்கள் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் வணக்கம். வாழ்க இந்தியா!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.