இது பெருமைக்குரிய விஷயம்; மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பிரமிப்பு
மும்பை: மூன்று முன்னணி போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் அதிகாரிகளை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். பின்னர் அவர்,
ஐ.என்.எஸ்., வக்சீர், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., சூரத் என்ற 3 கடற்படை போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு ஆகியவற்றிற்கு இன்று மிக முக்கியமான நாள். 21ம் நூற்றாண்டின் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் நாங்கள் மிக பெரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மூன்று முன்னணி போர்க்கப்பல்கள் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று போர்க்கப்பல்களும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம்.
இன்றைய இந்தியா உலகின் முக்கிய கடல்சார் வல்லரசாக வளர்ந்து வருகிறது. இன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன். மூன்று முன்னணி போர்க்கப்பல்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படும். இந்த சாதனைக்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய போர்க்கப்பல்களின் சிறப்பம்சங்கள் சில வரிகளில்...!
* P15B வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐ. என். எஸ்., சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பலில் ஒன்றாகும். இது 75 சதவீதம் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டுள்ளது.
* P17A ஸ்டெல்த் திட்டத்தின் முதல் கப்பலான ஐ.என்.எஸ்., நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமான ஒன்றாக திகழும்.
* P75 ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., வாக்சீர், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இது பிரான்சின் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.