பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகைகள்!
மதுரை; பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பார்வையாளர்கள் பதாகையுடன் வந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று உறுதி அளித்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சுரங்க திட்டம் வராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும், திட்டம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஊர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் டங்ஸ்டன் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்த போட்டியைக் காண்பதற்காக பார்வையாளர்களுக்கு மாடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் அமர்ந்துள்ள சிலர், ஜல்லிக்கட்டு போட்டியின் போது தங்களது கைகளில் பதாகைகளுடன் காட்சி அளித்தனர்.
அந்த பதாகைகளில் அரிட்டாப்பட்டியை காப்பாற்றவும், டங்ஸ்டன் திட்டத்தை எதிர்ப்பது தொடர்பான வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. வரிசையாக அமர்ந்திருந்த பார்வையாளர்கள் தங்களின் கைகளில் இந்த பதாகைகளை உயர்த்தி பிடித்தபடி எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் யார், அரசியல் கட்சியினரா, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.