உற்சாகத்துடன் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு! காளைகளை தீரத்துடன் அடக்கிய வீரர்கள்

6


மதுரை; புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 19 காளைகள் பிடிபட்டன.


பொங்கல் திருவிழாவின் முக்கிய அம்சமாக மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று (ஜன.14) ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாட்டு பொங்கல் தினமான இன்று (ஜன.15) புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு என மொத்தம் 120 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன.


பரிசோதனையின் போது அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.


அதன் பின்னர், உறுதி மொழி ஏற்கப்பட்டு, மகாலிங்கசாமி மடத்துகாளை கோவில் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. பிறக்கு வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. துள்ளி திரிந்த காளைகளுக்காக காத்திருந்த காளையர்கள் அதை அடக்கி தீரத்தை வெளிப்படுத்தினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் அகப்படாமல் துள்ளி திமிறின.


3 சுற்றுகள் முடிவில் 100 காளைகள் களம் கண்டன. அவற்றில் 22 காளைகள் பிடிபட்டன. 3 வீரர்கள் தகுதியான வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். இதுவரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 12 பேர் மாடுபிடி வீரர்கள், 3 பேர் பார்வையாளர்கள் ஆவர்.


இன்றைய ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக அளிக்கப்பபட உள்ளது. முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசளிக்கப்படுகிறது.


2வது பரிசு பெறும் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப்பசுவும், மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக அளிக்கப்படுகிறது. இதுதவிர, அண்டா, சைக்கிள், தங்க நாணயம், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் பரிசாக தரப்படுகின்றன.

Advertisement