கால்பந்து: சென்னை ஏமாற்றம்
கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை அணி 2-2 என போட்டியை 'டிரா' செய்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 11வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிகள் மோதின. 10 வது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் கான்னர் ஷீல்ட்ஸ் பந்தை சக வீரர் பச்சாவு லால்டின்புயாவிற்கு 'பாஸ்' செய்தார். இதை அப்படியே தலையால் முட்டி கோலாக மாற்றினார் லால்டின்புயா.
28 வது நிமிடம் முகமதன் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை காசிமோவ் அடித்த பந்தை, சென்னை கோல் கீப்பர் நவாஸ் தடுத்து அசத்தினார். இரண்டாவது பாதியில் மீண்டும் ஜொலித்த கான்னர் ஷீல்ட்ஸ், பந்தை சக வீரர் லுகாசிற்கு கொடுத்தார். இதை இடது காலால் உதைத்து வலைக்குள் தள்ளி, கோல் அடித்தார் லுகாஸ். சென்னை அணி கடைசி நிமிடத்தில் 2-0 முன்னிலையில் இருந்தது.
கூடுதல் நேரத்தில் சொதப்பியதால் முகமதன் தரப்பில் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கப்பட்டன. முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
இதுவரை விளையாடிய 16 போட்டியில், 4 வெற்றி, 6 'டிரா', 7 தோல்வி என 17 புள்ளிகளுடன் சென்னை அணி 10வது இடத்தில் நீடிக்கிறது. முகமதன் அணி 11 புள்ளியுடன் (16ல் 2 வெற்றி, 4 'டிரா', 10 தோல்வி) 12வது இடத்தில் உள்ளது.