இந்தியா தயாரித்த 3 கப்பல் நாட்டுக்கு மோடி சமர்ப்பணம்
மும்பைநம் கடற்படைக்கு நேற்று ஒரே நாளில் மூன்று கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் இரண்டு போர்க்கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும். மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், இவற்றை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நம் கடற்படைக்கு, ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ். வாக் ஷீர் ஆகிய மூன்று கப்பல்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
அதிநவீன வசதி
இந்திய கடற்படை போர்க்கப்பல் வடிவமைப்பு வாரியத்தால் வடிவமைக்கப்பட்டு, மாசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் இவை கட்டமைக்கப்பட்டன. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன், உள்நாட்டிலேயே இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த மூன்று கப்பல்களையும், கடற்படையிடம், பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
ஐ.என்.எஸ். நீலகிரி என்பது, புராஜக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ஷிவாலிக் ரக ரோந்து கப்பலாகும்.
இது எதிரிகளின் ராடார்களில் தென்படாத வகையில், அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல், 'பிரிகேட்' எனப்படும் ரோந்து மற்றும் கண்காணிப்பு வகையைச் சேர்ந்தது.
இதில் பலவகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் வசதி உள்ளது.
அதே நேரத்தில், ஐ.என்.எஸ்., சூரத், கோல்கட்டா வகை, 'டெஸ்டாயர்' எனப்படும் போர்க்கப்பலாகும். இந்த வகை போர்க்கப்பல்களில் உள்ளவற்றைவிட, இதில் புதிதாக நவீன வசதிகள், நீண்ட நேரம் செயல்படக்கூடிய திறன் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
சுயசார்பு இந்தியா
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் என்பது, ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும். இது பல வகைகளில் பயன்படக்கூடியது.
நிலத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளது. மேலும், உளவு தகவல்களையும் திரட்டும்.
இந்த கப்பல்களை அர்ப்பணித்து, பிரதமர் மோடி பேசியதாவது:
'ஆத்மநிர்பர் பாரத்' எனப்படும் சுயசார்பு இந்தியா என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும், நம் கடற்படையின் பலத்தை வலுவூட்டும் வகையிலும், இந்த கப்பல்கள் அமைந்துஉள்ளன.
ஒரே நேரத்தில் மூன்று கப்பல்கள் இணைக்கப்படுவது, நம் கடற்படையின் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
கடந்த, 10 ஆண்டுகளில், 33 கப்பல்கள், ஏழு நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படையில் இணைக்கப்பட்டுஉள்ளன.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிஅரசியல் மாற்றங்களில், இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.
இதற்கு, நம் கடற்படை வலுவானதாக இருப்பது அவசியம். அந்த வகையில், இந்த பிராந்தியத்தில் மிக முக்கியமான பங்களிப்பை நம் கடற்படை வழங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.