கெஜ்ரிவால், சிசோடியா மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி,டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில், முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது வழக்கு தொடர, அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

முறைகேடு



டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2021 - 22ம் நிதியாண்டில், மதுபானக் கொள்கை வகுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பின், இந்த புதிய கொள்கை ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில், டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 2024 மார்ச் 21ல், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்; பின், ஜூன் 26ல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.

ஆறுமாத சிறைவாசத்துக்குப் பின், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சில நாட்களுக்குப் பின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், தன் கட்சியைச் சேர்ந்த ஆதிஷியை முதல்வராக்கினார்.

'சட்டசபை தேர்தலில் வென்று, மக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆவேன்' என, அவர் சபதமிட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, 17 மாத சிறைவாசத்துக்குப் பின், 2024 ஆகஸ்டில் ஜாமினில் வெளியே வந்தார்.

'அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வதற்கு முன், அமலாக்கத் துறை அனுமதி பெற வேண்டும்' என, கடந்த ஆண்டு நவம்பரில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. இதற்கு அவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

பின்னடைவு



இதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்கு தொடர, அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் நேற்று அனுமதி வழங்கியது.

டில்லியில் வரும் 5ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கெஜ்ரிவால், சிசோடியா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement