மூன்றாவது சுற்றில் ஜோகோவிச் * ஆஸி., ஓபன் டென்னிசில்...
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு ஜோகோவிச், அல்காரஸ், சபலென்கா முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், போர்ச்சுகலின் பரியா மோதினர். 3 மணி நேரம், 1 நிமிடம் நீடித்த இப்போட்டியில் ஜோகோவிச், 6-1, 6-7, 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் 'நம்பர்-3' வீரர், ஸ்பெயின் அல்காரஸ், ஜப்பானின் நிஷியோகாவை சந்தித்தார். இதில் அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என சுலபமாக வெற்றி பெற்றார்.
மற்ற முதல் இரண்டாவது போட்டிகளில் செக் குடியரசின் லெஹெக்கா, மென்சிக், மச்சாக், பிரான்சின் போன்சி, போர்ச்சுகலில் போர்கஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சபலென்கா கலக்கல்
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை பெலாரசின் சபலென்கா, ஸ்பெயினின் மனெய்ரோ மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
ஜப்பானின் நவோமி ஓசாகா, செக் குடியரசின் முசோவாவை 1-6, 6-1, 6-3 என போராடி வீழ்த்தினார். தவிர, ஜெசிகா பெகுலா, கோகோ காப் (அமெரிக்கா), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோர் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் ஒலிவெட்டி ஜோடி, 2-6, 7-6 என ஆஸ்திரேலியாவின் வால்டன், திரிஸ்டன் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
430 போட்டி
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரங்கில் அதிக போட்டியில் பங்கேற்றவர்களில் சுவிட்சர்லாந்தின் பெடரரை (429) முந்தி முதலிடம் பிடித்தார் ஜோகோவிச் (430).
* கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக வெற்றி பெற்றவர்களில் ஜோகோவிச் (379 வெற்றி, 51 தோல்வி) முதல்வனாக நீடிக்கிறார். பெடரர் (369 வெற்றி, 60 தோல்வி) அடுத்து உள்ளார்.
* அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (423), ஸ்பெயின் வீரர் நடால் (358) அடுத்தடுத்து உள்ளனர்.