புத்தொழிலுக்கு அரசு நிதியுதவி ஜனவரி 25 வரை நீட்டிப்பு

சென்னை : தமிழகத்தில் 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் செய்கிறது. இந்நிறுவனம், 'டான்சீடு' திட்டத்தின் கீழ், ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பெண்களை முதன்மை பங்குதாரர்களாக உடைய நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாயும்; மற்ற துறை நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகின்றன.

இந்த நிதியுதவி தேவைப்படுவோர், ஸ்டார்ட் அப் டி.என்., இணையதளத்தில், விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பு டிச., 23ல் வெளியானது. நேற்று வரை, 200க்கும் குறைவான நபர்களே விண்ணப்பித்து உள்ளனர்.

இந்நிலையில், நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement