ரூ.13 கோடி திரட்டிய சென்னை ஸ்டார்ட் அப்

சென்னை : சென்னையைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனமான 'ஆர்பிட்எய்டு' 12.90 கோடி ரூபாய் முதலீட்டை, 'யுனிகார்ன் இந்தியா வெஞ்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து திரட்டி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சக்திகுமார், நிகில் பாலசுப்ரமணியம் மற்றும் மனோ பாலாஜி ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், செயற்கைக்கோள்களுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் தீர்வுகளுடன், விண்வெளியில் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில், அமெரிக்காவின் புளோரிடாவின் புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில், ஆர்பிட்எய்டு தன் காப்புரிமை பெற்ற எஸ்.ஐ.டி.ஆர்.பி., சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது.

இந்நிலையில், புதிய முதலீட்டில் கிடைத்த தொகை, செயற்கைக்கோள்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்கு தேவையான மாதிரி தொழில்நுட்பத்தை தயார்படுத்தி, அதை புவி வட்டப்பாதைக்கு விரிவுப்படுத்துவதுடன், எரிபொருள் நிரப்பும் நடைமுறையை வணீகரீதியாக செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து நிறுவனர்களில் ஒருவரான சக்திகுமார் தெரிவித்ததாவது:

விண்வெளியில் புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களை அதன் வேகத்துக்கு ஏற்ப பயணித்து, நேரிடையாக எரிவாயு நிரப்புவதற்கான சோதனை நடத்தப்பட உள்ளது.

மேலும், எரிபொருள் நிரப்பும் சேவையை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன், விண்வெளி தொழில்நுட்பத்தில் நீடித்த வளர்ச்சி இருப்பதை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement