தந்தை கொலைக்குபழி வாங்க ரவுடியை கொன்ற மகன் கைது
சென்னை, சென்னை காசிமேடு, திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன், 33. இவர் மீது காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன. இவரது மனைவி மாலதி, 30 மீதும் காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், கஞ்சா உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. இருவரும் கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்று வீட்டில் இருந்த உலகநாதனை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் உலகநாதன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதை தடுக்க வந்த மாலதிக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. அக்கம்பக்கத்தினர் மாலதியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், 2024ல், அதே பகுதியை சேர்ந்த ரவுடி தேசிங் என்பவரை, கடந்த ஆண்டு 10 பேர் கும்பல் கொலை செய்தது. இந்த கொலைக்கு உலகநாதனும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை தேசிங்கை கொலை செய்த கும்பலை பழிவாங்க, அவரது மகன் வல்லரசு, 24, காத்திருந்து திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, வல்லரசு மற்றும் அவரது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த ஆண்டனி, 21, எபினேசர், 24, எழிலரசன், 19, மனோஜ், 19, குணசேகரன், 18, அந்தோணி, 21, சலீம், 20, ஆகியோர், நேற்று உலகநாதனை அவரது வீட்டிலேயே வெட்டி கொன்றது, தெரியவந்தது.
வழக்கில் ஏழு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் வல்லரசு மீது கொலை முயற்சி உட்பட நான்கு வழக்குகளும், ஆண்டனி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 14 வழக்குகளும் உள்ளன.