மல்லாண்டை சுவாமி வழிபாடு!
'நாடு செழிக்கோணும் நல்ல மழை பெய்யோணும்,ஊரு செழிக்கோணும் உத்த மழை பெய்யோணும், களத்துக்கொரு மல்லாண்டை செய்யோணும்....!''
இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் தமிழர்களின் வாழ்வியலை உணர்த்தும் பொங்கல் திருநாளின், ஒரு அங்கமாக விளங்கிய, மல்லாண்டை சாமி வழிபாட்டில் இடம் பெறும் பாடல் வரிகள் தான் இது. அதுவும், கொங்கு மண்டலத்தில், ஒரு காலத்தில், 'மல்லாண்டை சாமி' வழிபாடு என்பது, மிக பிரசித்தம்.
மக்களின் பசி போக்கும் தானியங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, தனியாக, தானிய பொங்கல் வைத்து, ஒரு கல்லை நிறுவி, அதை, 'மல்லாண்டை சாமி'யாக பாவித்து, படைலிடுவது வழக்கம். விளைந்த தானியத்தை களத்துமேட்டில் காய வைத்து, ஒரு மூங்கில் கூடை நிறைய தானியங்களை எடுத்து, மல்லாண்டை சாமி முன் வைத்து வழிபட்ட பின்னரே, தானியங்களை வீட்டிற்கோ, அல்லது, விற்பனைக்கோ எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் விவசாயிகள்.
நெல், சோளம், கம்பு, ராகி, பருத்தி என ஒவ்வொரு விளை பொருளின் அறுவடைக்கு முன்பும், நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென, பச்சரிசி, கரும்பு, சர்க்கரை கலந்த பொரி, இவற்றுடன், அறுவடை செய்யப் போகும், தானியத்தின் நன்கு விளைந்த கதிர் சிலவற்றையும் சேர்த்து, படைய லிட்டு வணங்கி அறுவடைய துவக்குவது வழக்கம்.
பொங்கலுார், அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த கோபால் கூறுகையில், ''களத்துமேட்டுசாமி, தானியக்கடவுள், களமடிசாமி என பல்வேறு பெயர்களில் இந்த வழிபாடு நடத்தப்படுவதுண்டு. உழவர்கள் தானியங்களை காயப்போடும் போது, களத்துமேட்டில் சிறு லிங்கம் வடிவிலான கல் நட்டு, மல்லாண்டை சாமி வழிபாடு நடத்துவர்.
அதன் பின், அந்த தானியத்தை பயன்படுத்துவார்கள். கடந்த, 15 ஆண்டுகளில் மல்லாண்டை வழிபாடு, வெகுவாக குறைந்திருக்கிறது. கொங்கு மண்டலம் முழுக்க பிரசித்தி பெற்றிருந்த இந்த வழிபாடு, திருப்பூர் மாவட்டத்தில் சில கிராமத்தில் மட்டும் நடைபெறுகிறது,'' என்றார்.